நல்வரவு_()_


Thursday 27 January 2011

“மை லைலா”


ஆ..... என்னதிது, தலைப்பைப் பார்த்ததும் இலாவும் ஜெய்லாவும் பொல்லோட துரத்துறீங்க... அடிக்காதீங்க “அடிச்சா வலிக்குமில்ல?”:).  நான் சொல்லியிருக்கிறேனில்ல? “விழுவதை எல்லாம் பொறுக்குவதுதான் என் வேலை:)”. இத் தலைப்பைப் பார்த்தபிறகாவது தண்ணிக்குள்ள இருக்கிற ஆட்கள் வெளில வருகினமோ பார்ப்போம்.

சே...சே.. சொல்ல வந்ததை மறந்தே போனேன் தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லை. கிட்டத்தட்ட 6 மாத இடைவெளியில் எனக்கு ரெண்டே ரெண்டு அவார்ட்ஸ்தான் கிடைச்சிருக்கு:(, அதையும் ஜல்...ஜல்.... ஜலீலாக்காதான் குடுத்திருக்கிறா. மியாவும் நன்றி ஜலீலாக்கா.


இது சூப்பரா இருக்கில்ல?


இது பற்றி நான் இப்போ எழுதமாட்டேனே....

ஒழுங்கா, தினமும் புளொக்குக்கு வாறவர்களுக்கு, புளொக்கை ஒழுங்கா எழுதுபவர்களுக்கு.... பார்த்துப்பார்த்து, கூப்பிட்டுக் கூப்பிட்டு அவோர்ட் குடுக்கினம். ஆனால் புளொக்குக்கு இடையில வராமல் இருப்பவர்களுக்கு அவோர்ட்டே குடுக்கமாட்டினமாம். இது எவ்ளோ பெரிய கொடுமை?:).

உண்மையில கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க,  தினமும் புளொக் பக்கம் வாறம், படிக்கிறம்.... ஆனால் தொடர்ந்து ஒருமாதமாவது புளொக் பக்கம் எட்டிப் பார்க்காமல் ஆருக்காவது இருக்க முடியுதா?. இப்போ எமக்குப் பிடித்தவர்களோடு தினமும் கதைக்கிறம்.. சிரிக்கிறம்...., ஆனால் ஒரே ஒருநாள் அவர்களை முன்னால் வைத்துக்கொண்டு பேசாமல் இருக்க முடியுதா எம்மால்? அது எவ்ளோ கொடுமை?. அப்போ நீங்களே சொல்லுங்க எதுக்கு அவோர்ட் கொடுக்கோணும்.

அம்மா வாங்க, ஐயா வாங்க, அண்ணா வாங்க, அக்கா வாங்க, தம்பி வாங்க..(முன்பும் சொல்லிட்டேன்:)... எனக்கு தங்கை யாருமில்லை:) இங்கு தங்கை நான் தேன்..:)).. எல்லோரும் வாங்க... எல்லோருக்கும் இடது பக்கத்தில இதயம் இருக்குதில்ல? இதயத்தின் இடதுபக்க அறையின்மேல் கையை வச்சுக்கொண்டு இப்போ சொல்லுங்க.... முறையாப்பார்த்தால்... அதிராவுக்கு அதிகம் அவோர்ட் கொடுத்திருக்கோணுமெல்லோ?:)... ஆ... முறைக்காதீங்க, நீங்க முறைச்சா இதயம் வலிக்குமில்ல?(எனக்கு).

எனக்கு கொஞ்ச நாளா ஒரு சந்தேகம், என்னைப்பார்த்து ஏசீனம், முறைக்கினம் அடிக்க வருகினம்.... ஒருவேளை எனக்கு இதயமே இல்லையோ என்று, அதால டொக்ரரிடம் செக்பண்ணினேன்... அவர் சொல்லிட்டார்(நேற்றுத்தான்:)) யூ ஹாவ் எ குட் கார்ட்... என்று. அதில இடது பக்க இதயவறையும் பத்திரமா இருக்காம்.... இனியென்ன... தங்கியூ சொல்லிட்டேன் டொக்ரருக்கு.

இதைச் சொன்னதும் எப்பவோ ஒரு காலத்தில படித்த கவிதை நினைவுக்கு வந்துவிட்டது....

“இதயமே இல்லாத எனக்கு
இதய நோயாம்
என்னைப் பரிசோதித்த
டாக்டர் சொன்னார்
அவருக்கு எப்படித் தெரியும்
நான் - என் இதயத்தை
உன்னிடம் தந்ததையும்
அதை நீ கசக்கி
வீதியிலே வீசிஎறிந்ததையும்”

இந்தாங்கோ ரிசூ... சே.. டிஷ்யூ.... வீட்டுக்கு வாறவைக்கு கேக், வடை அப்படி ஏதும் கொடுத்தால் டிஷ்யூவும் சேர்த்துக் குடுக்கிறமெல்லோ? அப்படித்தான், இப்படிக் கவிதை எழுதினாலும் டிஷ்யூக் குடுக்கோணும், அது கை துடைக்க, இது கண்ணீர் துடைக்க:).


ஊசி இணைப்பு:).
வெளியில நேரா நின்றாக்கூட இப்படி ஒரு படம் அனுப்ப முடியுமோ?:), இது தண்ணிக்குள்ள(இது வேற தண்ணி:)) தலை கீழாக நின்றும் எவ்ளோ சூப்பர் படம் எடுத்து அனுப்பியிருக்கினம்..  இது மணி கட்டின பூஸார்..ர்..ர்..ர்..:).

==========================================================
படித்ததில் பிடித்தது:
என்ன வேண்டுதலோ…
மொட்டை போட்டது மரம்
இலையுதிர் காலம்!
==========================================================

காக்கா போங்கோ:
இல்ஸ்ஸ் நீங்க சொன்னதுபோல, பிளேன் தண்ணிக்குள்ளதான் லாண்ட் ஆயிட்டுதோ? எனக்குப் பக்குப் பக்கெண்டிருக்கு...
.................................................................................................................................................................................

Saturday 22 January 2011

கனியிருப்பக் காய் கவர்தல்


நெடுநாள் மனதில் இருந்த புதையல், இன்று எப்படியும் மேடையேற்றிட எண்ணி களம் இறங்கிட்டேன்.

எனக்கு சின்ன வயது ஞாபகங்கள் அப்படியே பசுமரத்தாணிபோல மனதிலே இருக்கு. நான் முதன் முதலில் கடிதம் எழுதத் தொடங்கியது என் 7 ஆவது வயதில் என நினைக்கிறேன்.

எமது ஒன்றுவிட்ட அண்ணன் ஒருவர், அப்போது யூனிவசிட்டி கிடைத்துப் போயிருந்தார். அவர் எப்போதும் என்னோடு நன்கு பாசமாக இருப்பார். யூனி போனதும் அங்கிருந்து எனக்கு மட்டும் தனியாக ஒரு என்வலப்பில் என் பெயர்போட்டு முகவரி இட்டு மெயில் அனுப்புவார், வீட்டில் ஏனையோருக்கு ஒரு மெயில் அனுப்புவார். அந்த வயதில் என் பெயரில் முகவரியிட்டு மெயில் வருவது எனக்கு தாங்கமுடியாத மகிழ்ச்சியைக் கொடுக்கும். வீட்டில் அண்ணன், அக்கா எல்லோரும் என்னைக் கலைப்பார்கள் கடிதம் படிக்க, நான் ஏதாவது அவர்களிடம் பெற்றுக்கொண்டு (கன்டோஸ், மிட்டாய்... etc.,) படிக்கக் கொடுப்பேன்.

பின், அம் மெயிலை என்னிடமிருந்த குட்டி சூட்கேஷில் பத்திரமாக அடுக்கி வைப்பேன். அவரின் எழுத்து முத்து முத்தாக இருக்கும். எனக்குப் புரியவேண்டும் என்பதற்காக, இன்னும் அழகாக அச்சிட்டதுபோல எழுதுவார். எழுதும் பேப்பரிலும் கோடுகள் வரைந்து அழகாக்கி அனுப்புவார். நான் எப்பவும் எனக்குப் பிடித்தவர்களை என் ரோல் மொடலாக எடுத்துக்கொள்வது வழக்கம், அவர்களின் நடை உடை பாவனைக்கு நானும் மாற முயற்சிப்பேன்(இப்பவும்தான்). அதுபோல் அவரின் எழுத்துக்களை பார்த்துப் பார்த்து நானும் அழகாக்கி எழுதப்பழகுவேன்.

எனக்கு கவிதை, பழமொழிகள், பொன்மொழிகள்.... ஏன் கண்ணதாசனில்கூட ஆர்வம் உருவாக வித்திட்டவர் அவரென்றே சொல்லலாம். அந்தளவுக்கு கடிதத்தில் எப்படியும் ஒரு பொன்மொழியோ பழமொழியோ அல்லது தத்துவமோ எனக்குப் புரியக்கூடிய வகையிலே எழுதுவார். அவரது கடிதம், கொஞ்சம் நகைச்சுவை கொஞ்சம் புத்திமதியாக, நல்ல அன்பாக, ஒரு குழந்தைக்கு எது நல்லதோ அவ்வகையில் அமைந்திருக்கும். இரு பக்கங்களாவது எழுதுவார், நானும் அப்படியே ஸ்கூல் நியூசிலிருந்து வீட்டு நியூசெல்லாம் கொடுப்பேன் பெரிய பதிலாக.

அப்போது எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம், அவரது கடிதம் வந்த மறுநாளே நான் போட்டுவிடுவேன், ஸ்கூலால் வந்ததும் கடிதம் வந்திருப்பின் வாசித்த கையோடு, மேசையில் எல்லாம் இருக்கமாட்டேன், நடுக் ஹோலிலே, நிலத்திலே படுத்திருந்துதான் எழுதுவேன், பின்புதான் சாப்பிடப்போவேன். அதேபோல என் கடிதம் கிடைத்ததும், என்ன படிப்பென்றாலும் பதில் போட்டுவிடுவார்.

ஆனால் பிரச்சனை என்னவென்றால், எனக்கு அட்ரஸ் எழுதவெல்லாம் தெரியாது, எனவே கடிதத்தை எழுதி அப்பாவிடம் கொடுத்துவிடுவேன், அவர் ஒபீஸ் போகும்போது/வரும்போது போஸ்ட் பண்ணிவிடுவார்.. அப்பாதான் எனக்கு அப்போ தபால்காரர்:).

ஒரு தடவை கடிதம் எழுதி அப்பாவிடம் கொடுத்தேன், எத்தனை நாளில் பதில் வருமெனத் தெரியும், ஆனால் பதில் வரவில்லை, மீண்டும் இன்னொரு கடிதம் எழுதினேன், அப்பாவிடம் கொடுத்தேன், பதில் இல்லை. அப்போ வீட்டில் ரெலிபோன் வசதியெல்லாம் இல்லை. எப்பவாவது விடுமுறை தினத்தில் அப்பாவின் ஒபீஸ் போய் ரெலிபோன்(ஆசைக்கு) யாருடனாவது கதைப்பதுண்டு, ஆனால் இவருடன் கதைக்கமுடியாதென நினைக்கிறேன், கதைத்ததாக நினைவில்லை.

மூன்று கடிதங்கள் போட்டுவிட்டேன் பதில் இல்லை. எனக்கு கோபம்தான் வந்தது, அப்படிப் பதில்போடமுடியாமல் போய்விட்டதே அவரால், ஒருவேளை மறந்துபோய்விட்டாரோ என்றெல்லாம் அந்தக் குட்டி மனதில் கோபம் வந்துவிட்டது.

உடனே அதேபோல குப்புறக்கிடந்து இன்னொருமடல், என் கடிதத்துக்கு ஏன் பதில் போடவில்லை என கோபமாக என்ன எழுதினேனோ நினைவில்லை எழுதி, மீண்டும் என் மதிப்புக்குரிய, நம்பிக்கைக்குரிய தபால்காரரான அப்பாவிடம் கொடுத்து, கொடுக்கும்போது, அப்பாவுக்கும் ஏசினேன், பாருங்கள் அப்பா எத்தனை நாளாகிவிட்டது, நானும் மூன்று கடிதங்கள் போட்டுவிட்டேன் பதில் இன்னும் வரவில்லையே எனச் சொல்லியபடி கொடுத்தேன். அப்பா ஒரு புன் முறுவலோடு, கடிதத்தை வாங்கி, அப்படியா ஆச்சி? என சொல்லிக்கொண்டு பொக்கட்டில் வைத்துக்கொண்டு போய் விட்டார்.

மீண்டும் பழையகணக்குப்படி சரியான நாளில் பதில் வந்திருந்தது. இம்முறை பெரிய கடிதமாக பல பக்கங்களில் பதில் வந்திருந்தது. அவர் எழுதித்தான் எனக்கு உண்மை தெரியவந்தது. நடந்தது என்னவென்றால்...

நான் கடிதத்தை எழுதி அப்பாவிடம் கொடுக்க, அப்பாவுக்கு அந்நேரம் ஒபீஷில் ஏதோ கடும் வேலைபோலும், அதனால் என் கடிதங்களை ஒபீஷ் ரேபிள் லாச்சியில் போட்டு வைத்திருக்கிறார், அனுப்பவில்லை.

நாலாவது கடிதம் கொடுத்தபோது நான் ஏசினேன் தானே, அதன்பின்புதான் போஸ்ட் பண்ணவில்லை என நினைவு வந்து, அப்பா தானும் ஒரு கடிதம் எழுதி, தான் தான் மறந்துவிட்டேன் என, எல்லாக் கடிதத்தையும் ஒரு என்வலப்பிலே வைத்து அனுப்பியிருக்கிறார்.

அப்போதான் அவர் எழுதியிருந்தார், உங்கள் பதில் பார்த்து மிகவும் கவலையடைந்துவிட்டேன். ஏன் என்னோடு கோபித்தீங்கள்? தவறு என்னில் இல்லை, நீங்கள் எப்படி என்னைத் தவறாக நினைத்தீங்கள், என் பதில் வராவிட்டாலும்கூட, நான் பதில் அனுப்பவில்லையே என தப்பான முடிவுக்கு வரக்கூடாது. எனக்கும் எக்ஸாம் நேரமாகவும் இருந்தது, உங்களிடமிருந்தும் பதில் வரவில்லை எனவேதான், எக்ஸாம் முடியட்டும் என விட்டிருந்தேன். எமக்கு கோபம் வந்து, அக்கோபத்தோடு ஒரு கடிதம் எழுதும்போது, அந் நேரம் அது எமக்கு சரிபோலத்தான் தெரியும். ஆனால், எப்பவுமே நாம் ஒரு கடிதமோ பதிலோ அடுத்தவருக்கு அனுப்பும்போது, எழுதுபவராக மட்டும் இருக்கக்கூடாது, வாசிப்பவராகவும் இருந்து, அந் நேரம் வாசிப்பவரின் மனநிலை எப்படி இருக்குமென்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.



“அன்பற்ற இடத்திலிருந்து வரும்
மலையளவு எதிர்ப்பையும்
தாங்குகிற இதயம்,
அன்புள்ள இடத்திலிருந்து வரும்
கடுகளவு எதிர்ப்பைக்கூட
ஏற்க மறுக்கிறதே”

இப்படியெல்லாம் இன்னும் ஏதேதோ... (இப்ப இருந்திருந்தால் அக் கடிதத்தையே ஸ்கான் பண்ணிப்போட்டிருக்கலாம், இடம்பெயர்வுகளோடு அந்த குட்டி சூட்கேஷும் தொலைந்துவிட்டது) எழுதி, முடிவிலே இதை எழுதியிருந்தார்...

“இனிய உளவாக இன்னாத கூறல், கனியிருப்பக் காய் கவர்ந்தற்கு”

அவர் இதுக்கு மட்டும் கருத்துக்கூறவில்லை, கண்டுபிடியுங்கள் என்றுதான் எழுதியிருந்தார். அத்துடன் அப்பிரச்சனை முடிந்து கடித எழுத்துக்கள் தொடர்ந்தது. எனக்கு அது திருக்குறள் எனத் தெரியாது, ஏதோ பழமொழி என நினைத்துவிட்டேன். ஏன் அப்பா அம்மாவிடம்கூட விளக்கம் கேட்காமல் விட்டேன் எனவும் நினைவில்லை.

ஆனால் சின்ன வயதென்பதால், அதெல்லாம் பசுமரத்தாணிபோல மனதிலே பசுமையாக படிந்துவிட்டிருந்தது. அதனால் இன்றுவரை, ஒரு மெயில் எழுதும்போதுகூட அது நினைவுக்கு வரும். இருப்பினும் என்னதான் கவனமாக இருந்தாலும், சில நேரங்களில் விதி தவறாகி, கண்ணை மறைத்து,  வேண்டுமன்றல்ல, யோசிக்காமல் மெயில் அனுப்பி விடுவதுமுண்டு. அது தவறுதான். கடிதம் போஸ்ட் பண்ணியபின், ரேசர் போட்டு அழிக்கவா முடியும்.

“தவறு செய்யாதவர் மனிதர் அல்ல - அதே நேரம்
தன் தவறை உணர்ந்து (மன்னிப்பு கேட்டு) திருந்தாதவரும் மனிதர் அல்ல”.

பின் குறிப்பு:
இக்கடிதம் உணர்த்தும்(எனக்கு உணர்த்தியிருக்கும்) இரு உண்மைகள் என்னவென்றால். குழந்தைப்பிள்ளைதானே என அலட்சியம் கொள்ளாமல், முடிந்தவரை அதுக்கும் புத்திமதிகள், அறிவுரைகளை அன்பாக சொல்லிக்கொடுக்கோணும்... நிட்சயம், அது புரியாதுவிட்டாலும் மனதில் பதியும், வளர வளர அர்த்தம் புரிந்துகொள்ளும். எமது குழந்தையென்றல்ல, எமக்கு பிடித்த யாரின் குழந்தையானாலும் சரி.. அன்பைக் கொடுத்தால் அன்பைப் பெறலாம்.



அடுத்தது, எப்பவுமே நாம் எழுத்தாளராக மட்டும் இல்லாமல் அதை வாசிப்பவராகவும் இருந்து, வாசிக்கும்போது அடுத்தவரின் மனநிலை எப்படியிருக்கும்.. அதாவது ஒருவேளை எனக்கு இப்படியொரு கடிதம் வந்திருந்தால், என் மனநிலை எப்படி இருக்கும் என எண்ணியபின்னே போஓஓஓஒஸ்ட் பண்ணோனும்.

இந்தக் கண்ணில ஏதாவது தெரியுதா?

Saturday 8 January 2011

கொசிப்பூ (1)

பிறகு காலையும் கொம்பையும் எடுத்துப்போட்டு ஆரும் வாசிச்சிடப்பூடாதூஊ:)).


சிரிக்க முடியாமல் போச்சு, அதேன் இப்பூடி

இது என் புதுத் தலைப்பல்ல. முந்தினது பெரிதாகி விட்டதால்தான் இதைப் போடுகிறேன். ஆருக்கும் பொழுது போகவில்லையாயின் இங்கு வந்து “விடுப்ஸ்” சொல்லிப் போங்கோ. என்னோடு மட்டுமில்லை ஆரோடு வேணுமெண்டாலும் கதையுங்கோ. இன்று இருக்கிறோம், நாளை நம் கையில் இல்லைத்தானே, எனவே சோகங்கள் நெஞ்சோடு இருந்தாலும் வெளியே கதைச்சுச் சிரிப்போம் வாங்கோ.

விடுப்ஸ் = புதினம்(புறுணம்) = கொசிப்ஸ் = அரட்டை... இது சரிதானே?
...................................................................................................................................

ம்ம்ம் எவ்ளோ நேரம்தான் காத்திருக்கிறது?

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஆரும் சொல்லிக் குடுத்திடாதையுங்கோ:)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

உஸ்... அப்பாடா, இதில நித்திரைகொண்டால்தான் காத்து வடிவாப்புடிக்குது:)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


பின் இணைப்பு:
பார்த்தேன், படித்தேன் பிடித்திருந்தது... நட்புக்கும் பொருந்துது.


==========================================================
ஒரு வெளவால் வீட்டுக்கு
இன்னொரு வெளவால் வந்தால்,
அதுவும் தொங்கிக்கொண்டுதானிருக்கும்
==========================================================